நெல் வயலில் பாசிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
நெல் வயலில் பாசிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
நீடாமங்கலம்:
நெல் வயலில் பாசிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.
காற்றோட்டம்
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், தொழில்நுட்ப வல்லுனர் கருணாகரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெற்பயிருக்கு இடப்படும் உரங்களை பாசிகள் எடுத்துக்கொண்டு நெற்பயிரைவிட வேகமாக வளரும் ஆற்றல் கொண்டது. மேலும் படர்ந்து கொண்டு நெற்பயிருக்கு தேவையான காற்றோட்டம் தடைபட்டு பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படும். நாற்றங்கால், நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு வயல்களில் களர் மற்றும் உவர் நிலங்களில் அடியுரமாக டிஏபி, கலப்பு உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் அதிகம் பயன்படுத்தப்பட்டால் பாசி மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாகி நாற்றுக்கள் கருகிவிடும் நிலை ஏற்படும்.
வயல்களில் குட்டை அமைத்து
நாற்றங்கால் மற்றும் வயல்களில் அதிகபடியான நீர் தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் காய்ச்சலும், பாய்ச்சலும் முறையில் வயல் நீர் குழாய் அமைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பாசி அதிகம் படர்ந்துள்ள வயல்களில் கோனோவீடர், ரோட்டரி வீடர் மற்றும் பவர் வீடர் போன்ற களை எடுக்கும் எந்திரங்களை பயன்படுத்தி களையுடன் நிலத்தில் மடக்கி உழ வேண்டும்.
உப்பு நிறைந்த ஆழ்குழாய் தண்ணீரை பயன்படுத்தும் போது வயல்களில் குட்டை அமைத்து நீரை தேக்கி வைத்து பின்னர் நாற்றங்கள் மற்றும் வயல் பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
ஏக்கருக்கு ஒரு கிலோ மயில் துத்தம் (காப்பர் சல்பேட்) மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து நெல்வயலின் வாய்மடையில் சாக்கு பையில் இட்டு நீர் பாசனம் செய்ய வேண்டும். வயலில் நீரை வடிகட்டிய பிறகு 0.5 சதம் மயில் துத்த கரைசலை (5 கிராம் என்ற அளவில் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து) தெளிக்க வேண்டும். பிறகு மேலும் பாசிகள் தென்பட்டால் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் மேலும் ஒருமுறை தெளித்து நெற்பயிரை பசியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு்ள்ளது.