உளுந்து பயிரில் அதிக மகசூல் பெற வழிமுறைகள்


உளுந்து பயிரில் அதிக மகசூல் பெற வழிமுறைகள்
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:45 PM GMT)

உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் வட்டாரத்தில் விவசாயிகள் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மானாவாரி நிலங்களில் உளுந்து சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர் சாகுபடி செய்து 40 முதல் 45 நாள் ஆன நிலையில் தற்போது பூக்கும் பருவத்தில் உள்ளது. இவ்வாறு பூக்கும் பருவத்தில் உள்ள உளுந்து பயிரில் டி.ஏ.பி. உர கரைசலை தெளிப்பதன் மூலம் பூக்கள் அனைத்தும் பிஞ்சுகளாக மாறி பூக்கள் உதிர்வது குறையும். இதனால் ஒரு ஏக்கருக்கு சுமார் 100 முதல் 150 கிலோ வரை உளுந்து கூடுதல் மகசூல் பெறலாம்.

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ டி.ஏ.பி. உரத்தினை முதல் நாள் இரவு மண்பானை அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் ஊற வைக்க வேண்டும். இக்கலவையினை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை நன்றாக கிளறி விடவேண்டும். பின்பு மறுநாள் காலை நன்றாக வடிகட்டி தெளிந்த கரைசலை 100 லிட்டர் நீருடன் கலந்து கைத் தெளிப்பான் மூலம் உளுந்து பயிரின் இலைகளில் நன்றாக நனையும்படி இலை வழியாக தெளிக்க வேண்டும். இதனால் இலை வழியாக பயிருக்கு டி.ஏ.பி. சத்து நேரடியாக கிடைப்பதால் பூக்கள் உதிர்தல் குறைக்கப்படுகிறது. மேலும் 15 நாட்கள் கழித்து பிஞ்சு காய் பருவத்தில் மீண்டும் ஒரு முறை டி.ஏ.பி. உரத்தினை இலை வழி மூலம் அளித்தால் பிஞ்சு காய்கள் நன்றாக முற்றி விதைகளின் எடை அதிகரித்து கூடுதல் மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story