மெட்ரோ ரெயில் பணி: கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்...!


மெட்ரோ ரெயில் பணி: கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்...!
x

மெட்ரோ ரெயில் பணி காரணமாக கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை சந்திப்பில் இருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 6-ந்தேதி (நாளை) முதல் 12-ந்தேதி வரையிலான ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் ஆற்காடு சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை சந்திப்பில் இருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

* கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் நேராக டாக்டர் அம்பேத்கர் சாலைக்கு ஆற்காடு சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை, ரங்கராஜபுரம் பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

* வடபழனியில் இருந்து ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம். * யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலையில் ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை, 2-வது குறுக்கு தெரு மற்றும் 2-வது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

* விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் தியாகராயநகர் செல்ல ஸ்டேஷன் வியூ சாலை மற்றும் பசுல்லா மேம்பாலம் வழியாக சென்று இலக்கை அடையலாம்.

* டாக்டர் அம்பேத்கர் சாலையில் ஒரு வழி பாதை ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து 2-வது அவென்யூ வரை தற்போது அமலில் உள்ளது. மேற்கண்ட சாலையில் ரத்தினம்மாள் தெரு சந்திப்பில் இருந்து ஆற்காடு சாலை சந்திப்பு வரை இருவழி பாதையாக மாற்றப்படுகிறது.

ரத்தினம்மாள் தெருவில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சாலை, கார்ப்பரேசன் காலனி சாலை மற்றும் பாளையக்காரன் தெரு வழியாக ஆற்காடு சாலைக்கு சென்று அவர்கள் இலக்கை அடையலாம். இந்த நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

மேற்கண்ட தகவல் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story