மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டம்
மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி கூட்டம்
மேட்டுப்பாளையம் நகராட்சி நகர் மன்றத்தின் சாதாரண கூட்டம், கூட்ட அரங்கில் தலைவர் மெகரிபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சோமசுந்தரம், துணைத்தலைவர் அருள் வடிவு மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தி.மு.க. நகர மன்ற உறுப்பினர் நவீன், நகராட்சியில் முன்பு ஆணையாளராக பணியாற்றிய ரா.வினோத் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தன்னிடம் போதிய ஆதாரம் இருப்பதாக கூறினார். இதனால் கவுன்சிலர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
தீர்மானங்கள் மீது விவாதம்
அப்போது துணைத் தலைவர் அருள் வடிவு கூறும்போது, கூட்டத்தில் முன்பு பணியாற்றிய நகராட்சி ஆணையர் இல்லாத போது அவரை விமர்சித்து பேசுவது தவறு. அப்போது தி.மு.க. நகர மன்ற உறுப்பினர் நவீன், துணைத் தலைவர் அருள் வடிவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்களின் மீது விவாதம் நடைபெற்றது.
அப்போது தி.மு.க.-அ.தி.மு.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரசார விவாதத்திற்கு பின்னர் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் நிறைவடைந்ததும் நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறி சென்றனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முறையாக பணியில் ஈடுபடாதது, நகராட்சியில் பெரிய ஒப்பந்ததாரர்களுக்கு உடனடியாக பில் பாஸ் செய்யப்படுகிறது ஆனால் சிறிய ஒப்பந்ததாரர்களுக்கு உடனடியாக பணம் தராமல் 2,3 மூன்று மாதங்களுக்கு இழுத்தடிப்பது. 29-வது வார்டில் குடிநீர் பிரச்சினை ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் தனசேகர், சுனில் குமார், மருதாசலம், குரு பிரசாத், முத்துலட்சுமி, விஜயலட்சுமி, கலைச்செல்வி கூட்டம் முடிந்த பின்னரும் கூட்ட அரங்கை விட்டு வெளியேறாமல் நகர மன்ற தலைவர் இருக்கைக்கு முன்பு தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகர மன்ற தலைவர் மெகரிபா பர்வீன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் சமாதானம் அடையாத அவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தொடர்ந்து தலைவர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் உள்ளிருப்பு போராட்டம் இரவு 7 மணியளவில் நிறைவடைந்தது.