மேட்டுப்பாளையம் - நெல்லை ரெயில் நிரந்தரமாக்கப்படுமா?


மேட்டுப்பாளையம் - நெல்லை ரெயில் நிரந்தரமாக்கப்படுமா?
x

மேட்டுப்பாளையம் - நெல்லை ரெயில் நிரந்தரமாக்கப்படுமா?

கோயம்புத்தூர்

கோவை

மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே இயக்கப்படும் விரைவு ரெயிலை நிரந்தரமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சிறப்பு ரெயில்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்பட தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கோவை, நீலகிரியில் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக மேட்டுப்பாளையம்- திருச்செந்தூர் இடையே விரைவு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்மூலம் நீலகிரி, கோவையை சேர்ந்தவர்கள் மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட புகழ்பெற்ற கோவில்களுக்கு ஆன்மிக பயணம் செல்ல முடியும். அதே நேரத்தில் தென் மாவட்ட மக்களுக்கும் தங்களது ஊர்களுக்கு சென்று வர எளிதாக இருக்கும் என்று கோரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே வாரந்தர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வாராந்தர ரெயில் பிரதி வாரம் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. இதேபோல் பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள்காலை 7.45 மணிக்கு சென்றடைகிறது.

பயணிகள் இடையே வரவேற்பு

இந்த சிறப்பு ரெயிலுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு நிலவுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவு இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர். முதல் முறையாக கடந்த ஏப்ரல் மாதம் இந்த ரெயில் இயக்கப்பட்ட போது 528 பயணிகள் பயணித்தனர். ஆனால் தற்போது பயணிகள் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் இந்த ரெயிலை அதிகமான அளவில் பயணிகள் பயன்படுத்துவது தெரியவந்து உள்ளது. எனவே இந்த ரெயிலை நிரந்தமாக இயக்க வேண்டும் அல்லது திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆன்மிக பயணம்

இதுகுறித்து ரெயில்வே ஆர்வலர் ஜெயராஜ் கூறியதாவது:-

கோவை மாவட்டம் தொழில்துறை மாவட்டமாக உள்ளதாக தென் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகமாக கோவையில் பணிபுரிகின்றனர். கோவை மற்றும் நீலகிரியில் முருக பக்தர்கள் அதிகம். இதனால் திருச்செந்தூருக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

இந்த வாராந்தர சிறப்பு ரெயில் இயக்கம் நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு கடைசி பயணமாக 30-ந் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு கடைசி பயணமாக 1-ந் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே இன்னும் 2 முறை மட்டுமே இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலை நிரந்தரமாக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே ரெயில்வே நிர்வாகம் இந்த ரெயிலை நிரந்தரமாக இயக்க முன்வர வேண்டும் என்றார்.


Next Story