8 மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது
8 மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 24-ந் தேதி நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மாறி மாறி வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்தது. அதேநேரத்தில் டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. பாசன தேவைக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று காலை அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. இரவில் 100 அடிக்கு கீழ் குறைந்தது அதாவது 8 மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.