மேட்டூர் அணை நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்தது
x
சேலம்

மேட்டூர்:-

பருவமழை கை கொடுக்காத நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது. இதனால் ஆடி மாதத்தில் ஆர்ப்பரிக்காமல் அமைதியாய் காவிரி ஆறு காட்சி அளிக்கிறது.

மேட்டூர் அணை

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய பெய்யும் தென்மேற்கு பருவ மழையையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய பெய்யும் வடகிழக்கு பருவமழையையும் சேமித்து வைத்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேட்டூர் அணை கடந்த 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை என்பது கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்திற்கு கை கொடுப்பதில்லை. அதற்கு மாறாக கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் பருவமழை தவறாமல் பெய்து வருகிறது. ஒரு சில ஆண்டுகளில் கேரள, கர்நாடக மாநிலங்களில் கூட தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை தீவிரம் அடையவில்லை. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு போதுமானதாக இல்லை. பருவமழை தீவிரமடையும் நேரங்களில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தமிழக மற்றும் கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடையும்.

தென்மேற்கு பருவமழை

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். குறிப்பாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் நேரங்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்இருப்பு திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படும்.

இதே காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் தீவிரமடைந்து காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அதாவது ஜூன் மற்றும் ஜூலை மாதம் என்பது தமிழில் ஆடி மாதமாகும்.

பொய்க்காத காவிரி

பண்டைய காலங்களில் பருவமழை குறித்த நேரத்தில் தவறாமல் பெய்து வந்ததால் பருவமழை காலத்துக்கு ஏற்றவாறு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதன் காரணமாக வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என்று காவிரியை அழைப்பார்கள்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் தீவிரம் அடையாததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளிலும் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை கடந்த மாதம் முழுமையாக அளிக்கவில்லை. இந்த மாதமும் இதே நிலை நீடித்து வருகிறது.

விவசாயிகள் கவலை

மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இருப்பினும் அணையில் இருந்து கடந்த மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.

நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது. அதாவது 93.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் இருப்பு நேற்று 34.40 டி.எம்.சி. ஆக குறைந்து உள்ளது. (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி).

அணையின் மொத்த கொள்ளளவில் பாதி அளவுக்கு கீழ் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால் ஆடி மாதத்தில் ஆர்ப்பரித்து அழகாய் பாய்ந்தோடும் காவிரி தற்போது ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாய் காட்சி அளிக்கிறது. தண்ணீர் குறைந்த காவிரி ஆறானது, தமிழக விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது.


Next Story