மேட்டூர் அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்


மேட்டூர் அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்
x

மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி வருவது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

மேட்டூர் அணையில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. அதன்படி, அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால், நடப்பாண்டு ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்ததாலும், அணைக்கு போதியளவு நீர்வரத்து இல்லாததால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அப்போது, அணையின் நீர்மட்டம் 30.90 அடியாக இருந்தது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், அணையின் வலது கரை, இடது கரை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் மீது பாசி படர்ந்து போன்ற பச்சை நிறத்தில் காணப்படுகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி வருவது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது, அணையில் தண்ணீர் பச்சை நிறமாக மாறியதை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.


Next Story