'பாமர மக்களின் நம்பிக்கை கலங்கரை விளக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்.'
அ.தி.மு.க.வின் குலதெய்வமாகவும், பாமர மக்களின் நம்பிக்கை கலங்கரை விளக்கமாகவும் வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்.என்று திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சைதை துரைசாமி பேசினார்.
106-வது பிறந்தநாள் விழா
திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர்.பக்தர்கள் பேரவை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சிட்டி பி.பழனிச்சாமி தலைைம தாங்கினார். பிரான்ஸ் எம்.ஜி.ஆர்.பேரவை தலைவரும், உலக எம்.ஜி.ஆர்.பேரவை ஒருங்கிணைப்பாளருமான முருகுபத்மநாபன் முன்னிலை வகித்தார். என்.செல்வராஜ் வரவேற்றார்.
விழாவில் சென்னை மாநகர முன்னாள் மேயரும், உலக எம்.ஜி.ஆர்.பேரவை தலைவரும், மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்.பயிற்சி மைய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் திலகம், புரட்சி நடிகர்
பாமர மக்களால் மக்கள் திலகம், புரட்சி நடிகர் என்று போற்றப்பட்டு பேராதரவைப்பெற்றவர் எம்.ஜி.ஆர். தன்னுடைய திரைப்படங்கள் மூலம் சமூக அவலங்களை தோலுரித்துக்காட்டியவர். சமூக நீதியையும், சமத்துவத்தையும் மற்றும் பாமர மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான திட்டங்களை பாடல்களாக, வசனங்களாக கொண்டு வந்தார்.
1954-ம் ஆண்டு வெளிவந்த மலைக்கள்ளன் படத்தில், "தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம், கல்வி தெரியாத பேர்களை இல்லாமல் செய்வோம்..." என்று பாடினார். அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் ஒவ்வொரு ஊரிலும் பள்ளிக்கூடம் திறந்தார்.
மக்களின் பேராதரவு
'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் லோகோவில் தி.மு.க.வின் இரு வர்ணக்கொடியை முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். புரட்சிகரமான வசனங்களாலும், சூப்பர்ஹிட் பாடல்களாலும் நாடோடி மன்னன் அடைந்த மாபெரும் வெற்றியை அடுத்து, ஆங்காங்கே எம்.ஜி.ஆர். மன்றங்கள் திறக்கப்பட்டன.
படத்தின் வெள்ளிவிழாவில் பேரறிஞர் அண்ணா, 'இதயக்கனி' என்று எம்.ஜி.ஆரை போற்றிப்பாராட்டினார்.
என்றும் தேவை எம்.ஜி.ஆர். கொள்கை
புரட்சித்தலைவரின் திரைப்படங்களை திரைப்பாடங்களாக நம்பிய பாமர மக்களின் நம்பிக்கையை, ஆட்சியின் மூலம் நிறைவேற்றி, மக்களின் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பொழுதுபோக்கு கலையாக இருந்த சினிமாவின் மூலம் மக்களின் வாழ்வியல் பண்புகளை வார்த்தெடுக்கவும், சமூக மாற்றத்தை உருவாக்கவும், "என்றும் தேவை எம்.ஜி.ஆர். கொள்கை" என்ற பாமர மக்களின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே.
புரட்சித்தலைவர் ஓர் அவதாரம் என்று நான் சொல்வதற்கு காரணம், அவருடைய தீர்க்கதரிசன சிந்தனை மற்றும் தொலைநோக்கு பார்வைதான். இதற்கு என் வாழ்வில் நடந்த ஒரு சரித்திரச் சான்றை சொல்ல விரும்புகிறேன். 1980-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான் தோல்வியடைந்து, புரட்சித்தலைவரை சந்தித்த நேரத்தில், 'கவலைப்படாதே, நீதான் அ.தி.மு.க.வின் முதல் மேயர். ஆகவே இப்போதே அதற்கான களப்பணி ஆற்று' என்று கட்டளையிட்டார். ஆனால், நீதிமன்ற சிக்கல் காரணமாக புரட்சித்தலைவர் காலத்தில் மேயர் தேர்தல் நடைபெறவில்லை.
அ.தி.மு.க.வின் முதல் மேயராக....
புரட்சித்தலைவர் மறைந்து கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் கழித்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், புரட்சித்தலைவரின் தீர்க்க தரிசனத்தை நிறைவேற்றும் வகையில், என்னை சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார்.
மேயருக்கு போட்டியிட்ட எனக்கு 200 வார்டுகளிலும் கூடுதலாக வாக்களித்து, தி.மு.க. மேயர் வேட்பாளரை விட 5.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், புரட்சித்தலைவரின் தீர்க்க தரிசனத்தின்படி, அ.தி.மு.க.வின் முதல் மேயராக வெற்றி பெற்றேன். இந்த பிரமாண்ட வெற்றியினால் மகிழ்ச்சியடைந்து, பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, எனக்கு பெருமை சேர்த்தார் முதல்வர் அம்மா.
'பொற்கால மாநகராட்சி'
'சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்' என்ற லட்சியத்துடன், மேயர் பதவிக்கான எந்த சலுகையும் பெறாமல் தன்னுடைய சொந்தச் செலவில் பணியாற்றி, நேர்மையான தூய்மையான நிர்வாகத்தை வழங்கியதால், 'பொற்கால மாநகராட்சி' என்று பொதுமக்களாலும், பொதுநல அமைப்புகளாலும் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது.
மேலும் என்னால் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் உலகெங்கும் புகழ்பெற்றது.
அ.தி.மு.க.வின் குலதெய்வம் எம்.ஜி.ஆர். 'என்றும் தேவை எம்.ஜி.ஆர். கொள்கை' என்ற பாமர மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில், மேயராக நான் செயல்பட்டதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. இன்றுவரை மக்கள் மத்தியில் பாராட்டப்படுவதற்கு, நான் கடைபிடிக்கும் இந்த கொள்கையே காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.க்கள்
விழாவிற்கு குணசேகரன், மீனாட்சி சுந்தரம், தங்கமுத்து, அண்ணாதுரை, கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ., திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார், சூலூர் எம்.எல்.ஏ. கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சு.குணசேகரன், பழனிச்சாமி, துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, கோல்டன்நகர் பகுதி செயலாளர் ஹரிகரசுதன், கவுன்சிலர் சின்னச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். முடிவில் கவுரி கனகு என்ற கனகராஜ் நன்றி கூறினார்.
கலை நிகழ்ச்சிகள்
நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பக்தர்கள் பேரவை கவுரவ ஆலோசகர்கள் சிவநடராஜன், பாண்டிபாலா, ராசுஅகிலன், நிர்வாகிகள் நடராஜன், ரோகிணிகுமார், பால் வின்சென்ட், ராமகிருஷ்ணன், வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி குழந்தைகளின் ஓவியப்போட்டி, சிலம்பாட்டம், கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஸ்ருதிலயா குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சைதை துரைசாமி பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதேபோல் சைதை துரைசாமிக்கு எம்.ஜி.ஆர். பக்தர்கள் பேரவை, அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.