சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு பிளாட்டினம் விருது


சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு பிளாட்டினம் விருது
x

சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சில் சார்பில் பிளாட்டினம் விருது வழங்கப்பட்டது.

சென்னை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சுற்றுசூழல் மதிப்பீட்டு நிறுவனமான இந்திய பசுமை கட்டிட கவுன்சில் சார்பில் ஆண்டுதோறும் மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமான பொருட்கள், சுற்றுசூழல் தரத்தை மேம்படுத்துதல், குறைவான திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரித்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கொடுக்கப்படும் விருது சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வழங்கப்பட்டது. அதற்கான பிளாட்டினம் கேடயத்தை இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தலைவர் அஜித்குமார் சோர்டியாவிடம் இருந்து தெற்கு ரெயில்வேயின் பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பெற்றார்.

விழாவில் காந்தி பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தூய்மையை வலியுறுத்தும் மாணவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சென்டிரல் ரெயில் நிலையத்தில் காந்தியின் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வுகள் அடங்கிய கண்காட்சியை பொது மேலாளர் ஆர்.என்.சிங் திறந்து வைத்தார்.

தெற்கு ரெயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் கவுஷல் கிஷோர், தெற்கு ரெயில்வே முதன்மை துறைத் தலைவர் பி.விஸ்வநாத் ஈரைய்யா, அலுவலர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.


Next Story