எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மாலை அணிவிக்க எதிர்ப்பு


எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மாலை அணிவிக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு நேற்று காலை 11 மணிக்கு நகர அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் செந்தில்குமார் எம்.எல்.ஏ, நகர செயலாளர் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல் பாபு, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து பகல் 12 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர் வேங்கையன் தலைமையில் நகர செயலாளர் புண்ணியமூர்த்தி உள்பட 10-க்கும் மேற்பட்ட கட்சியினர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

வாக்குவாதம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி அணியை சேர்ந்த நகர செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாகி குபேந்திரன், நகர துணை செயலாளர் முருகன், கவுன்சிலர் குட்டி உள்பட 30-க்கும் மேற்பட்டோர் அவர்களை மாலை அணிவிக்க கூடாது என கூறி தடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் போலீசார் இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மாலை அணிவிப்பதற்கு எடப்பாடி அணியினர் சம்மதம் தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பரபரப்பு

இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர் வேங்கையன் தலைமையில் கட்சியினர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து சென்றனர். இதனால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story