சேறும், சகதியுமாக மாறிய எம்.ஜி.ஆர். மார்க்கெட்


சேறும், சகதியுமாக மாறிய எம்.ஜி.ஆர். மார்க்கெட்
x
தினத்தந்தி 26 Dec 2022 6:45 PM GMT (Updated: 26 Dec 2022 6:46 PM GMT)

கோவையில் பெய்த மழையால் எம்.ஜி.ஆர். மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் பெய்த மழையால் எம்.ஜி.ஆர். மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது.

எம்.ஜி.ஆர். மார்க்கெட்

கோவை மாவட்டத்திற்கு மட்டுமில்லாமல் கேரளாவிற்கும் தேவையான காய்கறிகளை வினியோகம் செய்யும் ஒட்டு மொத்த மைய பகுதியாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட் விளங்குகிறது. இங்கு கோவை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மட்டுமின்றி நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் மொத்தமாக லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கோவையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மார்க்கெட் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் நேற்று காலையில் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மழைநீரில் நனைந்து ஏராளமான காய்கறிகள் அழுகி வீணாகியது.

சேறும், சகதியுமாக...

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் ஒரு நாளைக்கு 500 டன்னுக்கு மேல் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் மழைநீர் கட்டமைப்பு இல்லை. இதன் காரணமாக மார்க்கெட் முழுவதும் மழைநீர் தேங்கி விடுகிறது. மேலும் மார்க்கெட்டிற்குள் சாலைகள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. அதற்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை சாலைகள் போடப்படவில்லை. இதனால் மழை பெய்தால் மார்க்கெட் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் கடை வாடகை மற்றும் குத்தகை தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அடிப்படை வசதிகள் செய்ய முன்வரவில்லை. இதனால் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெளியூர்களில் இருந்து லாரிகளை கொண்டு வரும் ஓட்டுனர்கள் பலர் அவதிக்குள்ளாகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story