கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய முயன்ற சம்பவத்தில் இடைத்தரகர் கைது
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய முயன்ற சம்பவத்தில் இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
ஆணா, பெண்ணா என பரிசோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 கர்ப்பிணிகளுக்கும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள சிம்மனபுதூர் கிராமம் பூசாரி வட்டம் பகுதியில், திருப்பத்தூரை சேர்ந்த சுகுமார், வேடியப்பன் ஆகியோர் மூலம் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்களின் நடவடிக்கையின் பேரில் இருமாவட்ட மருத்துவ குழுவினர் சென்று அந்த பகுதியில் சோதனை நடத்தி அந்த தகவலை உறுதி செய்தனர்.
இடைத்தரகர் கைது
இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பரிசோதனை செய்வதற்கு இடைத்தரகராக செயல்பட்ட நாயக்கனூர் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 51) என்பவரை கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின்பேரில் இச்சம்பவத்திற்கு காரணமான சுகுமார், வேடியப்பன் ஆகியோரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில் தீவிர குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, 2 பேரையும் தேடி வருகின்றனர்.