பாதியில் நிற்கும் மேற்கு புறவழிச்சாலை திட்டம்
மேற்கு புறவழிச்சாலை பணிகள் பாதியில் நிற்பதால் ரோட்டில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி
மேற்கு புறவழிச்சாலை பணிகள் பாதியில் நிற்பதால் ரோட்டில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேங்கும் மழைநீர்
பொள்ளாச்சி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்திமில் அருகில் தொடங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்தூர், நல்லூர் வழியாக ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டி வரை 8.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. தற்போது 3¼ மீட்டர் நீளமுள்ள சாலை 10 மீட்டருக்கு அகலப்படுத்தப்படுகிறது.மேலும் சிறு பாலங்களும் கட்டப்படுகின்றன. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூமிபூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே இருந்த சாலையை தோண்டி ஜல்லி கற்கள் போடப்பட்டன. ஆனால் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதற்கிடையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்குவதால் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
வாகன ஓட்டிகள் அவதி
மேற்கு புறவழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூமிபூஜையுடன் தொடங்கின. இதற்காக சாலையை தோண்டி ஜல்லிகற்கள் போடப்பட்டன. ஆனால் அதன்பிறகு சாலை பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். படுமோசமான சாலையால் அவசர தேவைக்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை. மேலும் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இந்த சாலை பணிகள் முடிவடையாததால் சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், ஜமீன்முத்தூர், தாளக்கரை, நல்லூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
குழாய் அமைக்கும் பணி
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் (திட்டங்கள்) கூறியதாவது:-
பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை 8.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இதற்காக முதலில் ரூ.50 கோடியே 35 லட்சத்து 30 ஆயிரத்துக்கு தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டது. அதன்பிறகு நிலம் கையகப்படுத்த, சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய திருத்தி அனுப்பப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஆனதால் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஆனது. தற்போது ரூ.73 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் முடிவடைந்து, நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்ட பிறகு சாலை பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.