சிறுகனூரில் மியவாக்கி காடுகளை உருவாக்கும் திட்டம்
சிறுகனூரில் மியவாக்கி காடுகளை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு வருகை தந்தார். பின்னர் அவர் கொனலை ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால் பணிகளையும், கொனலை ஊராட்சி, ஆயக்குடி ஊராட்சி, கரியமாணிக்கம் ஊராட்சி, எதுமலை ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் கரியமாணிக்கம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும், சிறுகனூர் ஊராட்சியில் 15 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகளை மியவாக்கி முறையில் நடவு செய்து அடர்வனம் காடுகளை உருவாக்கும் திட்டத்தை மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மண்ணச்சநல்லூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விசைத்தெளிப்பான், வேளாண் கருவிகள் தொகுப்பு, விவசாய இடுபொருட்கள், என மொத்தம் ரூ.45 ஆயிரத்து 937 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்தி நிகழ்ச்சியில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், உள்ளிட்ட வளர்ச்சித் துறை அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.