மிலாது நபி ஊர்வலம்


மிலாது நபி ஊர்வலம்
x
தினத்தந்தி 28 Sep 2023 8:45 PM GMT (Updated: 28 Sep 2023 8:45 PM GMT)

ஊட்டி, கோத்தகிரியில் மிலாது நபி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நீலகிரி

கோத்தகிரி

ஊட்டி, கோத்தகிரியில் மிலாது நபி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மிலாது நபி ஊர்வலம்

இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாது நபி நாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஊட்டியில் உள்ள பெரிய பள்ளி வாசலில் மிலாது விழா நடந்தது. விழாவிற்கு முகமதிய மிலாது கமிட்டி தலைவர் முகம்மது சா, அயத்துல்லா இஸ்லாம் மதரசா செயலாளர் உபைத்துல்லா, ஜமய்யா மசூதி தலைவர் ஆதம் யுனஸ் சேட் ஆகியோர் தலைமை தாங்கினார்.

நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஆணையாளர் ஏகராஜ், ஆர்.டி.ஓ. மகாராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மிலாது நபி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறப்பு தொழுகை

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள நூருல் ஹுதா மதரசா சார்பில், மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மதரசா பள்ளிவாசலின் தலைமை இமாம்கள் சைபுதீன், இஸ்மாயில் ஆகியோர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தனர். ஊர்வலம் ராம்சந்த் சதுக்கத்தில் தொடங்கி காமராஜர் சதுக்கம், பஸ் நிலையம், கடைவீதி, காம்பாய் கடை வழியாக மீண்டும் மதரசாவை அடைந்தது. சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேண வேண்டும். அமைதி காக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

பள்ளிவாசல் தலைவர் முகமது சுபைர், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மிலாது நபியையொட்டி கோத்தகிரி கடைவீதி தலைமை பள்ளிவாசலில் இமாம் மவுலவி சதாம் உசேன் தலைமையில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. அரவேனு, கட்டப்பெட்டு, எஸ்.கைகாட்டி, கூக்கல்தொரை பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒற்றவயல் பகுதியில் இருந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஏராளமான சிறுவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பாலம்வயல், கொட்ட மேடு, மச்சிக்கொல்லி மட்டம், அஞ்சுகுன்னு வரை ஊர்வலமாக சென்றனர். இதேபோல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை ஒவ்வொரு ஊர்களிலும் மிலாது நபி ஊர்வலம், இஸ்லாம் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


Next Story