மீலாது விழா ஊர்வலம்
நாகூர், திட்டச்சேரி அருகே மீலாது விழா ஊர்வலம் நடந்தது
நாகூர்:
நபிகள் நாயகம் பிறந்தநாள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூரில் இஸ்லாமிய அரபி பள்ளி மாணவ-மாணவிகளின் மீலாது விழா ஊர்வலம் நேற்று மாலை ஹாபில், ஜமால் குழுவினர் இஸ்லாமிய பாடல்கள் கொண்டு சிறப்பாக நடைபெற்றது. தர்கா உட்புறத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நூல் கடைத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் தலைமை அறங்காவலர் முஹம்மது காஜி ஹூசைன் சாஹிப் தலைமையில், போர்டு ஆப் டிரஸ்டிகள் முன்னிலையில், ஆலோசனை குழு தலைவர் முகம்மது கலிபா சாஹிப் மற்றும் உறுப்பினர்கள், அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர்.
அதேபோல் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் மஸ்ஜித் அல் ஹிதாயா பள்ளிவாசல் சார்பில் நிர்வாக சபை தலைவர் முகமது நாசர் தலைமையில், செயலாளர் அப்துல் ரசீது, பொருளாளர் அமானுல்லா ஆகியோர் முன்னிலையில் மிலாதுநபி பிறந்தநாள் ஊர்வலம் நடந்தது. இதில் ஜமாத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் ஹிதாயா மதரசாவில் பயிலும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.