நாமக்கல் மாவட்டத்தில் அதிநவீன பால் பண்ணை அமைக்க மத்திய அரசு ரூ.6¾ கோடி மானியம்-ராஜேஷ்குமார் எம்.பி. பேட்டி


நாமக்கல் மாவட்டத்தில் அதிநவீன பால் பண்ணை அமைக்க மத்திய அரசு ரூ.6¾ கோடி மானியம்-ராஜேஷ்குமார் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. நாமக்கல்லில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் பால் குளிரூட்டும் நிலையத்தில் ரூ.50 கோடியில் புதிதாக அதிநவீன பால் பண்ணை அமைக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். அங்கு கூடுதலாக மாவட்ட நிர்வாகத்தால் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பால் பண்ணை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சகத்தில் மானியம் கேட்டு கோரிக்கை வைத்திருந்தேன்.

இந்தநிலையில் நாமக்கல்லில் அதிநவீன பால்பண்ணை அமைக்கும் பணிக்கு ரூ.6 கோடியே 89 லட்சத்தை மத்திய அரசு திருப்பி தரப்படாத முழு மானியமாக வழங்கி உள்ளது. அதற்கான உத்தரவை கடந்த 23-ந் தேதி வழங்கியது. 11 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள பால் பண்ணையில் தினமும் 1 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட் செய்யப்படும். அதோடு பால் உப பொருட்களும் உற்பத்தி செய்யப்படும். அதன் மூலம் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள். மோகனூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் விவசாயிகள் உட்பட யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சிப்காட் அமைப்பதற்கான பணிகள் நடைபெறும். நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவ்வாறு நாமக்கல், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது பல்வேறு மக்கள் நலப் பணிகள் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு ராஜேஷ்குமார் எம்.பி. கூறினார்


Next Story