பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:45 PM GMT)

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாசி-பங்குனி திருவிழா

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி-பங்குனி திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து பால்குடம், அக்னி சட்டி, காவடி, அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து கையில் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். நேற்று விடுமுறை தினமாக இருந்ததால் பக்தர்கள் அதிகாலை முதல் பால்குடம், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நே்ாத்திக்கடன் செலுத்தினர்.

முன்னதாக முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம், அக்னி சட்டி மற்றும் அலகு குத்தி வந்த பக்தர்கள் கொப்புடையம்மன் கோவில் வழியாக கல்லுக்கட்டி, 2-வது பீட், முத்துபட்டினம் வழியாக 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் சுமந்து வந்த பாலை கோவில் நிர்வாகம் சார்பில் மிகப்பெரிய அண்டாக்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு அதில் ஊற்றி அதன் பின்னர் கருவறையில் இருந்த அம்பாளுக்கு இரவு, பகலாக அபிஷேகம் நடைபெற்றது.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தியதால் காரைக்குடி நகரம் முழுவதும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. விழாவையொட்டி நாளை மாலை முத்தாலம்மன் கோவிலில் இருந்து கோவில் கரகம், மது, முளைப்பாரி மற்றும் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்சியும், நாளை மறுநாள் கோவில் பால்குடம், காவடி மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந்தேதி இரவு அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும், மறுநாள் சந்தனகாப்பு அலங்காரம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவையொட்டி தினந்தோறும் இரவு கும்மி கொட்டுதல், ஆன்மிக பாடல் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று காரைக்குடி நகரில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் ஆலோசனையின் பேரில் கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி, கோவில் கணக்கர் அழகுபாண்டி ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள், சேவைக்குழுவினர் உள்பட பலர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் ஸ்டாலின் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story