ஊருக்குள் சுற்றித்திரியும் மிளா
கருங்கல் அருேக ஊருக்குள் மிளா சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாகர்கோவில்:
கருங்கல் அருேக ஊருக்குள் மிளா சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஊருக்குள் புகுந்த மிளாக்கள்
குமரி மாவட்ட வன உயிரின சரணாலயத்தில் யானை, கரடி, புலி, மிளா, மான்கள், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்து மக்களை அச்சுறுத்தும் சம்பவம் அறங்கேரி வருகிறது. அந்த வகையில் களியல் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட தேங்காப்பட்டணத்தை அடுத்த கூட்டாலுமூடு அம்சி பகுதியில் ஒரு மிளா (சாம்பார் மான்) நுழைந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மிளாவை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.
இதற்கிடையே குளச்சல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 மிளா ஊருக்குள் புகுந்தன. பின்னர் அவை எங்கு சென்றது? என்று தெரியவில்லை. இதைத் தொடர்ந்து அந்த மிளாக்களை பிடிக்க தனியாக குழு அமைக்கப்பட்டது.
பொதுமக்கள் அச்சம்
இந்த குழுவினர் இரவு- பகலாக மிளாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கருங்கல் அருகே மானான்விளையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஒரு மிளா ஊருக்குள் சுற்றித்திரிந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். குளச்சல் அருகே வழிதவறி வந்த 2 மிளாக்களில் ஒன்று இங்கு வந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மிளாவை பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.