கந்து வட்டி கொடுமையால் மினி பஸ் அதிபர் தற்கொலை
மார்த்தாண்டம் அருகே கந்து வட்டி கொடுமையால் மினி பஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நிதி நிறுவனம் மீது போலீசில் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே கந்து வட்டி கொடுமையால் மினி பஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நிதி நிறுவனம் மீது போலீசில் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினி பஸ் அதிபர்
மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறம் மணலி விளையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67). இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.
விஜயகுமார் சொந்தமாக ஏராளமான மினி பஸ்களை இயக்கி வந்தார். மேலும் தொழில் விஷயமாக படந்தாலுமூடு பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தார்.
கடனை அடைக்க முடியாமல் சிரமம்
ஆனால் மினி பஸ் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விஜயகுமார் சிரமப்பட்டார். இதனால் ஒவ்வொரு மினி பஸ்சாக அவர் விற்று கடனை அடைத்து வந்தார். அந்த வகையில் அவர் ஆசை, ஆசையாய் வாங்கிய 5 மினி பஸ்களையும் விற்று விட்டார். இதனால் அவர் சோகத்தில் இருந்து வந்தார்.
இறுதியாக ஒரேயொரு மினி பஸ் மட்டும் வைத்திருந்தார். மேலும் படந்தாலுமூட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சத்தில் வாங்கிய கடனை மட்டும் அடைக்க வேண்டியிருந்தது.
இந்தநிலையில் அந்த ஒரு மினி பஸ்சையும் விஜயகுமார் கடந்த 2019-ம் ஆண்டு புதுக்கடை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தார். அப்போது அந்த மினி பஸ்சை வாங்கிய நபரிடம் நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.5 லட்சத்தையும் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று உடன்பாடு செய்துள்ளார்.
தற்கொலை
ஆனால் அந்த மினி பஸ்சை வாங்கிய நபர் தனியார் நிதி நிறுவனத்துக்கு பணத்தை செலுத்தவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் விஜயகுமாரிடம் ரூ.5 லட்சத்திற்கு கந்து வட்டியுடன் சேர்த்து ரூ.8 லட்சம் தர வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர்.
தொடர்ந்து இதுபோன்று தொல்லை கொடுத்ததால் விஜயகுமார் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலைக்கு சென்றார். நேற்றுமுன்தினம் அவர் வீட்டில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடினார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடலை வாங்க மறுப்பு
இதுகுறித்து விஜயகுமாரின் மகன் வினேஷ் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதில், தனது தந்தை விஜயகுமார் கந்துவட்டி கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மிரட்டிய ஆடியோவும் தங்களிடம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் மாலையில் சமரசம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விஜயகுமார் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்து வட்டி கொடுமையால் மினி பஸ் அதிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.