ஆட்டோக்களில் மினி நூலகம் திட்டம்
ஆட்டோக்களில் மினி நூலக திட்டத்தை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கோவை
ஆட்டோக்களில் மினி நூலக திட்டத்தை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
வீதி நூலகம்
கோவை மாநகர போலீஸ் சார்பில் மாணவ-மாணவிகள், இளைஞர்கள் இடையே புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீதி நூலகம் தொடங்கப்பட்டது.
இதையடுத்து கோவையில் உள்ள ஆட்டோக்களில் மினி நூலகம் தொடங்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி ஆட்டோவில் மினி நூலகம் தொடக்க நிகழ்ச்சி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஒரு ஆட்டோவில் மினி நூலகத்தை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அவர், அந்த ஆட்டோவில் சிறிதுநேரம் அமர்ந்து புத்தகம் படித்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
புத்தக வாசிப்பு
கோவை மாநகரில் 2 ஆயிரம் ஆட்டோக்கள் வரை ஓடுகின்றன. ஓய்வு நேரங்களை ஆட்டோ டிரைவர்கள் புத்தகம் வாசிக்க வசதி யாக மினி நூலகம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களும் புத்தகங்களை எடுத்து வாசிக்கலாம். இதன் மூலம் அவர்களிடமும் புத்தக வாசிப்பு ஆர்வம் ஏற்படும்.
கோவை மாநகரில் ஏற்கனவே தொடங்கப்பட்ட வீதி நூலகத் திற்கு பள்ளி மாணவ-மாணவிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. புத்தக வாசிப்பை மேம்படுத்துவதன் மூலம் சட்டம்- ஒழுங்கு மேம்படும், பிரச்சினைகள் குறைய வாய்ப்பு உள்ளது.
பெண்கள் பாதுகாப்பு
அறிவை கூர்மையாக்க உதவும் மிக முக்கிய ஆயுதம் புத்தகங்கள். கோவை மாநகரில் ஓடும் 2 ஆயிரம் ஆட்டோக்களிலும் மினி நூலகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மினி நூலகத்தில் பெண்கள் பாதுகாப்பு, தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்கள் அதிகளவு இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தில் புத்தக நன்கொடை பெட்டியை கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதில், பொதுமக்கள் பயன்படுத்திய புத்தகங்களை போடலாம்.
அந்த புத்தகங்கள் வீதி நூலகம் மற்றும் ஆட்டோ மினி நூலகத் திற்கு வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.