3 டன் ரேஷன் அரிசியுடன் மினி லாரி பறிமுதல்


3 டன் ரேஷன் அரிசியுடன் மினி லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 5 Oct 2022 6:45 PM GMT (Updated: 5 Oct 2022 6:46 PM GMT)

திருக்கோவிலூர் அருகே 3 டன் ரேஷன் அரிசியுடன் மினி லாரி பறிமுதல் டிரைவர் கைது

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை போலீஸ் சரகத்துக்குட்பட்ட கழுமரம் கிராமம் கோட்டகம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 3 பேர் மினி லாரில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் மினி லாரியில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் பிடிபட்டவர் மினி லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருணாச்சலம் தெருவை சேர்ந்த ஞானசேகரன் மகன் நிர்மல்ராஜ்(வயது 32) என்பதும், 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளியூருக்கு கடத்தி செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நிர்மல்ராஜை கைது செய்த போலீசார் மினி லாரியுடன் 3 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story