விருதுநகரில் மினி மாரத்தான் போட்டி
விருதுநகரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
விருதுநகரில் போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் மற்றும் செந்திக்குமார் நாடார் கல்லூரி சார்பில் பொது போக்குவரத்தை பலப்படுத்தி சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்போட்டி முக்கிய வீதிகள் வழியாக சென்று கல்லூரி மைதானத்தில் நிறைவடைந்தது. கலெக்டர் ஜெயசீலன் மற்றும் போக்குவரத்து கழக பொதுமேலாளர் சிவலிங்கம் ஆகியோர் போட்டியினை தொடங்கி வைத்தனர். இதை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் நடைபெற்றது. பெண்களுக்கான பிரிவில் சத்திரிய பெண்கள் பள்ளி மாணவி லாவண்யா முதல் இடத்தையும், அர்ச்சனா 2-வது இடத்தையும், ஆதிலட்சுமி 3-வது இடத்தையும், வர்ஷினி 4-வது இடத்தையும், குரு தீபா 5-வது இடத்தையும் பெற்றனர். ஆண்கள் பிரிவில் தளவாய்புரத்தை சேர்ந்த தீபன்குமார் முதலிடத்தையும், சாத்தூரை சேர்ந்த வேல்முருகன் 2-வது இடத்தையும், சிவகாசியை சேர்ந்த ஜோதி முருகன் 3-வது இடத்தையும், விருதுநகரை சேர்ந்த செல்வரத்தினம் 4-வது இடத்தையும், ஜி.என்.பட்டியை சேர்ந்த அழகுராஜ் 5-வது இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணிமாறன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முன்னதாக சி.ஐ.டி.யு. போக்குவரத்து பொதுச்செயலாளர் வெள்ளத்துரை வரவேற்றார்.