சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்றபோது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குதிடீர் உடல் நலக்குறைவுதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்
காரிமங்கலம்:
சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் சென்றபோது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் காரிமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
திடீர் உடல் நலக்குறைவு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தார். இதற்காக அவர் சேலத்தில் இருந்து கார் மூலம் நேற்று கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டிருந்தார். நேற்று மதியம் 12 மணிக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சென்றபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. லேசான மயக்கமும் அடைந்தார்.
இதனால் அவருடன் சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் அமைச்சரை உடனடியாக காரிமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் அங்கு சென்று அவருடைய உடல்நிலையை பரிசோதித்தனர். அதில் ரத்த அழுத்தம் குறைந்ததாலும், வயிற்றுவலியாலும் அவர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
2 அமைச்சர்கள் விரைந்தனர்
இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கர், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன், எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ், மதியழகன் ஆகியோர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.
திடீர் உடல் நலக்குறைவால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்த தகவல் காரிமங்கலம் பகுதியில் வேகமாக பரவியது. இதன் காரணமாக தனியார் ஆஸ்பத்திரி முன்பு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெங்களூரு ஆஸ்பத்திரி
இந்த நிலையில், சிகிச்சைக்கு பின் ஒரு மணி நேரம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் ஆஸ்பத்திரியில் ஓய்வு எடுத்தார். பின்னர் உடல்நிலை சீரானதால் இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் அங்கிருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார்.
ஆரோக்கியமாக இருக்கிறார்
அவர் பெங்களூரு ஒசூர் ரோட்டில் உள்ள நாராயணா இருதாலயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, ஆஸ்பத்திரியின் இயக்குனர் மற்றும் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவி ஷெட்டி மற்றும் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கண்ணன் தலைமையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பூரண உடல் நலத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகமும், டாக்டர்களும் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் அவருக்கு மேலும் ஒரு சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்க வேண்டிய இருப்பதால் நேற்று இரவு அந்த ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றார். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் தமிழ்நாடு புறப்பட்டு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால், அவரை பார்க்க சென்னையில் இருந்து அவருடைய மனைவி விமானத்தில் பெங்களூருவுக்கு புறப்பட்டுள்ளார்.