காங்கயம் ஊராட்சி ஒன்றியபகுதியில் ரூ.1.92 கோடியில் புதிய திட்டப் பணி
காங்கயம் ஊராட்சி ஒன்றியபகுதியில் ரூ.1.92 கோடியில் புதிய திட்டப் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
காங்கயம் ஊராட்சி ஒன்றியபகுதியில் ரூ.1.92 கோடியில் புதிய திட்டப் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
ரூ.1.92 கோடியில்...
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம்புதூர், சிவன்மலை, படியூர், பாப்பினி, வீரணம்பாளையம் மற்றும் தம்மரெட்டிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில், ரூ.1.92 கோடியில் 42 புதிய திட்டப்பணிகளை, தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 88 அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.
42 புதிய திட்டப் பணிகள்
அப்போது அவர் கூறியதாவது:-
காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம்புதூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்தில் அய்யனாரப்பன் குட்டை புணரமைக்கும் பணி,படியூர் ஊராட்சியில் ரூ.1.90 லட்சத்தில் தெற்குபாளையம் கோட்டக்காடு குட்டை தூர்வாரும் பணி, வீரணம்பாளையம் ஊராட்சில் பள்ளி கூட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.21 லட்சத்தில் அர்த்தனாரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஓட்டு கட்டிடம் பழுதுபார்க்கும் பணி, தம்மரெட்டிபாளையம் ஊராட்சியில் ரூ5.77 லட்சத்தில் காமாட்சி வலசு ஆதிதிராவிடர் காலனியில் மயானத்திற்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்றும் பணி, சிவன்மலை ஊராட்சியில் ரூ 6.91 லட்சத்தில் சிவன்மலை சமத்துவ மயானம் எரிமேடை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, ரூ 6.91 லட்சத்தில் ஜம்புவாய் குடியிருப்பில் வடிகால் மற்றும் உறிஞ்சி குழி அமைக்கும் பணி என காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.92 கோடியில் 42 புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
88 அறங்காவலர்கள்
மேலும் முதல்-அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக நியமிக்கப்பட்டுள்ள 88 கோவில்களுக்கான அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. கோவில்களின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால் தான் கோவில்களில் இருக்கக்கூடிய துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் மற்றும் பராமரிக்கப்படாத கோவில்களை மேம்படுத்தும் பணிகளையும் சிறப்பாக செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சி.குமரதுரை, உதவி ஆணையர்கள் ஜெயதேவி, அன்னக்கொடி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்திசுப்பிரமணியம், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ஹரிஹரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.