ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் சு.முத்துச்சாமி பேட்டி
ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு
ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
வளர்ச்சித்திட்ட பணிகள்
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் ரூ.8 லட்சம் செலவிலும், விநாயகர் கோவில் வீதியில் ரூ.7½ லட்சம் செலவிலும் அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம், கணேசமூர்த்தி எம்.பி., திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து செங்குட்டுவன் வீதியில் ரூ.47 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டும் பணியையும், ரெயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் ரூ.61 லட்சம் செலவில் ஆய்வகங்கள், கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் கருங்கல்பாளையம் காந்திசிலையில் இருந்து மணிக்கூண்டு வரை ரூ.11 கோடியே 34 லட்சம் செலவில் நடைபாதைகளுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணியையும், ஈரோடு-தாராபுரம் சாலையில் அண்ணமார் பெட்ரோல் பங்கில் இருந்து செங்கோட்டையன் மண்டபம் வரை ரூ.7 கோடியே 80 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் சு.முத்துச்சாமி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
அடுக்குமாடி குடியிருப்புகள்
ஈரோடு மாநகரில் குடிநீர், சாக்கடை, சாலை வசதி பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஈரோடு மாநகரில் அழகேசன் நகர், பெரியார் நகர், ஓடைப்பள்ளம் பகுதிகளில் 1,400 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் இந்த குடியிருப்புகள் திறக்கப்பட்டன. ஆனால் அங்கு காவலர் நியமிக்கப்படாததால், கட்டிடங்களில் இருந்த பைப்புகள், குடிநீர் தொட்டி ஆகியன திருட்டுபோய் உள்ளன.
எனவே அந்த கட்டிடங்களை பராமரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு, ஏற்கனவே அங்கு இருந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும்.
உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் நடப்பு ஆண்டு ரூ.1½ கோடி கல்வி பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துச்சாமி கூறினார். அப்போது, "உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அமைச்சராக வேண்டும் என்று திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இங்கு அதுபோல் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?" என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் சு.முத்துச்சாமி, "இது தொடர்பாக தீர்மானம் எதுவும் நிறைவேற்ற வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறிஉள்ளார். அந்த உத்தரவை நாங்கள் பின்பற்றுகிறோம்", என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவக்குமார், மண்டல தலைவர்கள் பி.கே.பழனிசாமி, தண்டபாணி, காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் ஜவகர்அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.