ஈரோடு மாவட்டத்தில் 17,553 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்


ஈரோடு மாவட்டத்தில் 17,553 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
x

ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 553 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 553 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

விலையில்லா சைக்கிள்கள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 127 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தநிலையில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இடவசதி

விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் படித்து முடித்து கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற மாபெரும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உள்ளார். வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் போதிய இடவசதி இல்லை என்று மாணவிகள் தெரிவித்தனர். சி.என்.கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று கேட்டார்கள். அந்த கல்லூரியில் விளையாட்டு தொடர்பான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே பள்ளிக்கூட வளாகத்திலேயே கூடுதல் கட்டிடம் கட்ட முடியுமா என்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இடவசதி ஏற்படுத்தி கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

17,553 மாணவ-மாணவிகள

இந்த விழாவில் பிளஸ்-2 படிக்கும் 395 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 படிக்கும் 8 ஆயிரத்து 357 மாணவர்கள், 9 ஆயிரத்து 196 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 553 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

இதில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு கல்வி மாவட்ட அதிகாரி கோகுலசந்திரா, தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மண்டல தலைவர் பி.கே.பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story