அந்தியூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு
அந்தியூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடியிருப்புகளுக்குள் வெள்ளம்...
அந்தியூர், பர்கூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி அதில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் உபரிநீராக வெளியேறியது. மேலும் அந்தியூர் பொிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரி ஆகிய ஏரிகளும் நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறியது. இதன்காரணமாக அந்தியூர் பகுதியில் உள்ள பெரியார் நகர், அழகர் நகர், தெப்பக்குளம் வீதி, சாலை குறுக்கு வீதி, நேர்வீதி, கண்ணப்பன் கவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு
இந்த நிைலயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதலும் கூறினர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டு உள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
திட்டப்பணிகள்
இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி கூறுகையில், 'ஈரோடு மாவட்டத்தில் மழை வெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையிலான அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். தற்போது கூடுதலாக மழை பெய்து உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. இத்தகைய நேரங்களில் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வரும் காலங்களில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன,' என்றார்.
ஆய்வின்போது அந்தியூர் தாசில்தார் தாமோதரன், வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசங்கர், நகர தி.மு.க. செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், தமிழ்நாடு கோ-ஆப் டெக்ஸ் இயக்குனர் எஸ்.பி.ரமேஷ் , அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி செல்வகுமார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவசங்கரன், தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளர் முருகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சோபியா சேக், துணை அமைப்பாளர் செபஸ்தியான், கிருஷ்ணமூர்த்தி, மாதேஸ்வரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.