தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பருவம் டிசம்பர் மாதத்தில் தொடங்க நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு
தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பருவம் டிசம்பர் மாதத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
பணி நியமன ஆணைகள்
பாலக்கோட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தீபனா விஸ்வேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சக்திவேல் வரவேற்று பேசினார்.
விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 24 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும், 3 பேருக்கு ஆய்வுக்கூட ரசாயனர் பணி நியமன ஆணைகளையும் வழங்கி பேசினார்.
நடவடிக்கை
அப்போது அவர் பேசியதாவது:- சர்க்கரை துறையின் சார்பில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்து பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.
சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கும், உற்பத்தி திறன் அதிகரிப்பதற்கும் எது தடையாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அவற்றை களைவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் சிறப்பாக இயங்கி வருகின்றன.
அரவை பருவம்
தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023-ம் அரவை பருவம் டிசம்பர் மாதம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் உரிய பணியாளர்கள் நியமிக்காத காரணத்தால் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உரிய முறையில் இயங்கவில்லை. தற்போது உரிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டதால் அனைத்து ஆடைகளும் சிறப்பாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன் உள்ளிட்ட கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் வேணுகோபால் நன்றி கூறினார்.