தமிழகத்தில் முதல் முறையாக ஈரோட்டில் ரூ.1½ கோடி செலவில் மக்காத குப்பைகளை எரியூட்டும் திட்டம்- அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் முதல் முறையாக ஈரோடு மாநகராட்சியில் ரூ.1½ கோடி செலவில் மக்காத குப்பைகளை எரியூட்டும் திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல் முறையாக ஈரோடு மாநகராட்சியில் ரூ.1½ கோடி செலவில் மக்காத குப்பைகளை எரியூட்டும் திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல்முறை
ஈரோடு மாநகராட்சியில் பொதுமக்களிடம் இருந்து மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளர்கள் சேகரிக்கிறார்கள். மக்கும் குப்பைகளை மக்க வைத்து உரமாக தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக 21 இடங்களில் நுண் உரமாக்கல் மையம் செயல்படுகிறது. தினமும் 70 டன் முதல் 80 டன் வரை மக்கும் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் சுமார் 20 டன் உரம் கிடைக்கிறது. இதேபோல் மக்காத குப்பைகள் வெண்டிபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் முதல் முறையாக மக்காத குப்பைகளை எரியூட்டி அழிக்கும் திட்டம் ஈரோடு மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஈரோடு வைராபாளையத்தில் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு நெப்டியூன் ஆட்டோமேசன் நிறுவனத்தின் சார்பில் தினமும் 25 டன் குப்பைகள் எரியூட்டப்பட உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
100 டன்
விழாவுக்கு ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பொத்தானை அழுத்தி குப்பைகளை எரியூட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மக்காத குப்பைகளை எரியூட்டி அழிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், 25 டன் குப்பைகள் எரியூட்டும் வகையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கூடுதல் கட்டமைப்பு விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இனிமேல் ஈரோடு மாநகராட்சியில் எங்குமே குப்பைகள் இல்லாத நிலை உருவாக்கப்படும். தமிழகத்திலேயே முதல் முறையாக ஈரோட்டில் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மற்ற மாநகராட்சிகளில் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மக்காத குப்பைகளை 850 டிகிரி மற்றும் 950 டிகிரி வெப்பநிலையில் எரியூட்டப்பட்டு கூழ்மமாக தயாரித்து ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது. கூடுதல் மையம் அமைக்கப்பட்ட பிறகு 2 சிப்ட்கள் பணியாற்றினால் 100 டன் வரை குப்பைகளை எரியூட்ட முடியும்", என்றார்.
தள்ளுவண்டிகள்
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 77 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.66 லட்சத்து 500 மதிப்பிலான தள்ளுவண்டிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், செயற்பொறியாளர் விஜயகுமார், மண்டல தலைவர்கள் பி.கே.பழனிசாமி, கவுன்சிலர் ஈ.பி.ரவி, தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.