ஈரோட்டில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 23 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- அமைச்சர் சு.முத்துசாமி நடத்தி வைத்தார்


ஈரோட்டில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 23 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- அமைச்சர் சு.முத்துசாமி நடத்தி வைத்தார்
x

ஈரோட்டில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 23 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நடத்தி வைத்தார்.

ஈரோடு

ஈரோட்டில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 23 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நடத்தி வைத்தார்.

இலவச திருமணம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு இணை ஆணையாளர் மண்டலத்திலும் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பேரில், ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் மண்டலத்தில், 23 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், எம்.எல்.ஏ.க்கள் திருமகன் ஈவெரா, சி.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, 23 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். அப்போது மங்கள வாத்தியங்கள் முழங்க, 3 கிராம் தங்க மாங்கல்யத்தை மணமகன், மணமகள் கழுத்தில் கட்ட அங்கு நின்றிருந்த உறவினர்கள் மலர் தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.

34 வகையான சீர்வரிசை

இதைத்தொடர்ந்து, 23 ஜோடிகளுக்கும் தலா ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பட்டுப் புடவை, பட்டு வேட்டி, சட்டை துண்டு, வெள்ளி மெட்டி, சாமி படம், குத்துவிளக்குகள், பூஜை தட்டு உள்பட 34 வகையான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் திண்டல் வேலாயுத சாமி கோவிலில் புதுமண தம்பதிகள் சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து கோவில் மண்டபத்தில் திருமண விருந்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையாளர் மேனகா, உதவி ஆணையாளர்கள் அன்னக்கொடி, சுவாமிநாதன், ரமணிகாந்தன், இளையராஜா, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் மற்றும் மணமக்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story