எர்ணாபுரத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்


எர்ணாபுரத்தில்  வெறிநோய் தடுப்பூசி முகாம்  அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
x
நாமக்கல்

நாமக்கல் அருகே எர்ணாபுரத்தில் நடந்த ஒன்றிய அளவிலான வெறிநோய் தடுப்பூசி முகாமை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

வெறிநோய் தடுப்பூசி முகாம்

நாமக்கல் அருகே எர்ணாபுரத்தில் நாமக்கல் ஒன்றிய அளவிலான வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விலங்குகள் வதை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாமை ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

மனித சமுதாயம் எதிர் கொள்கிற பயங்கர நோய்களில் ஒன்று வெறிநோய் ஆகும். எனவே இந்த நோய் வருமுன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் முகாமும் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே போன்று கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பூசி முகாம், பறவை காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்பு துறை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறாக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விலங்குகள் வதை தடுப்பு சட்டம்

ஒன்றிய அளவிலான வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விலங்குகள் வதை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாமானது நேற்று கபிலர்மலை ஒன்றியத்திலும் நடைபெற்றது. இதன்படி வருகிற 15-ந் தேதி திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திலும், 30-ந் தேதி நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மங்களபுரத்திலும், ஜனவரி 5-ந் தேதி புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திலும், 24-ந் தேதி எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலும், 27-ந் தேதி பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலும், 17-ந் தேதி ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திலும், 23-ந் தேதி மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திலும், மார்ச் 4-ந் தேதி பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திலும், 8-ந் தேதி வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திலும் முகாம் நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் மருதபாண்டி, கால்நடை மருத்துவர்கள் நடராஜன், ராஜேந்திரன் உள்பட உதவி மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story