நாமக்கல் மாவட்டத்தில்இளம்வயது திருமணங்கள் வெகுவாக குறைந்துள்ளதுஅமைச்சர் கீதாஜீவன் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில்இளம்வயது திருமணங்கள் வெகுவாக குறைந்துள்ளதுஅமைச்சர் கீதாஜீவன் தகவல்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் வெகுவாக குறைந்து இருப்பதாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சமூக நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சகி சேவை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இம்மையத்தின் மூலம் 574 வழக்குகள், பெண்களுக்கான இலவச உதவி எண் 181 மூலமாகவும், நேரடியாகவும் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது.

இளம்வயது திருமணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் முன்னெடுப்பில் போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் திருமணம் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக 165-க்கும் மேற்பட்ட இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி கடந்த காலங்களை விட இளம்வயது திருமணங்கள் வெகுவாக குறைந்துள்ளது. இப்பணிகளை சிறப்பாக மேற்கொண்ட கலெக்டருக்கும், அலுவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகள் மையத்தில் ஆய்வு

முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் பரமத்திவேலூர் தாலுகா படமுடிபாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்திலும் ஆய்வு செய்த அமைச்சர் சத்துணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மாணவிகளுக்கு மதிய உணவினை அமைச்சர் பரிமாறினார். நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சகி - ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆய்வு செய்த அமைச்சர், சேவை மையத்தில் தங்கும் பெண்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவி, காவல்துறை உதவி, சட்ட உதவி குறித்து விரிவாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் நாமக்கல் நகராட்சி கோட்டை தொடக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் அங்கன்வாடி மைய குழந்தைகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து கருப்பட்டிபாளையம் போதை மறுவாழ்வு மையம், சிவபாக்கியம் முதியோர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வுகளில் கலெக்டர் ஸ்ரேயாசிங், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, மாவட்ட சமூகநல அலுவலர் கீதா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சத்துணவு பணியிடங்கள் நிரப்பப்படும்

இறுதியாக அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் சமூகநலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பெண்களுக்கான உதவி எண் 181 மற்றும் 1098 ஆகியவற்றிற்கு வரும் அழைப்புகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தை பொறுத்த வரையில் மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 9 அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 1,600 அரசு பள்ளிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் சத்துணவு மையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் சத்துணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் இடையே போதை பழக்கத்தை அறவே ஒழிக்க அரசும், காவல்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமூகநலத்துறையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story