மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம்1 கோடி பேருக்கு மருந்து பெட்டகம்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்


மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம்1 கோடி பேருக்கு மருந்து பெட்டகம்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
x
தினத்தந்தி 28 Jan 2023 6:45 PM GMT (Updated: 28 Jan 2023 6:45 PM GMT)
நாமக்கல்

மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டவர்களிடம் மருந்து பெட்டகங்கள் சென்று சேர்ந்துள்ளன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அரசு நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை வரவேற்று பேசினார். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.பி.க்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ஏ.கே.பி.சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன், ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1 லட்சத்து 3 ஆயிரத்து 321 பயனாளிகளுக்கு ரூ.303 கோடியே 37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.351 கோடியே 12 லட்சம் மதிப்பில் 315 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து அவர் ரூ.23 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 60 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்குறுதிகள் நிறைவேற்றம்

இந்தியாவிலேயே முட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் 2-வது இடம் வகிக்கிறது. தமிழக அளவில் மொத்தம் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளை கொண்டு, சாலை போக்குவரத்தில் முதலிடம் பெற்றுள்ளது. நான் அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக நாமக்கல்லிற்கு வந்துள்ளேன்.

கடந்த 2 நாட்களாக நாமக்கல் மாவட்ட இளைஞர்களும், பொதுமக்களும் எனக்கு அளித்த வரவேற்பு சிறப்பாக இருந்தது. தி.மு.க அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களில் மக்களுக்கு அளித்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.

கட்டணமில்லா பயணம்

முதல்-அமைச்சர் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்திட்டதே, நகர பஸ்களில் பெண்களுக்கு கட்டணம் இனி கிடையாது என்பதற்கான கோப்பில் தான். இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 216 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 3 கோடியே 71 லட்சம் பயணங்களை பெண்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள். இதுதவிர திருநங்கைள் 16 ஆயிரத்து 190 முறையும், மாற்றுத்திறனாளிகள் 2.52 லட்சம் பயணங்களையும் இந்த மாவட்டத்தில் மேற்கொண்டு உள்ளனர்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளிடம் மருந்து பெட்டகங்கள் சென்று சேர்ந்துள்ளன.

ரூ.88 கோடி கடன் தள்ளுபடி

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் பயன் அடைகின்றனர். தற்போது கூடுதலாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 334 மாணவிகள் புதிதாக விண்ணப்பித்து உள்ளனர். நாமக்கல்லிலும் ஆயிரக்கணக்கானோர் இத்திட்டத்தில் பயன்பெற்று உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்களின் ரூ.88 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

நாமக்கல்லில் புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தினமும் 1 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்க ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.1,300 கோடியில் குடிநீர் திட்டம்

ராசிபுரத்தில் ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. வரும் காலங்களில் பல திட்டங்கள் நாமக்கல்லுக்கு கிடைக்க உள்ளன.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சிலம்பம் போட்டி

முன்னதாக அரசு துறைகளின் சார்பில் வைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். இறுதியாக பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்திலும் அமைச்சர் கலந்து கொண்டு அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். அப்போது சிலம்பம் சுற்றிய மாணவர்கள் அவருடன் செல்பி எடுத்தனர்..

விழாவில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, சிறப்பு திட்ட செயலாக்கத்தின் அரசு சிறப்பு செயலாளர் நாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் சிவக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story