தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி


தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் எம்.ஆா்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அடிக்கல் நாட்டு விழா

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் 60 அடி ஆழத்தில் 4 ராட்சத கிணறுகளை அமைத்து, அதன் மூலம் பாலக்கோடு பேரூராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், நகரின் பல்வேறு பகுதிகளில் ரூ.88.50 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, ரூ.83 லட்சத்தில் பாலக்கோடு பேரூராட்சி பஸ் நிலைய மேம்பாட்டு பணி, ரூ.79.79 லட்சத்தில் வளமீட்பு பூங்காவில் உயிரி அகழ்வாய்வு (பயோ மைனிங்) பணி, ரூ.13.68 லட்சத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேட்டரி மூலம் இயங்கும் 9 குப்பை வாகனங்கள் வழங்குதல் என மொத்தம் ரூ.7.29 கோடி மதிப்பீட்டில் 5 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா பாலக்கோடு பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி வரவேற்றார். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் தாஸசீனா இதாயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய தொழிற்சாலைகள்

விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரியில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் இருந்த பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டு, அங்கு தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சுமார் ரூ.17 கோடி மதிப்பில் சிப்காட் நுழைவு வாயில் மற்றும் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

500 ஏக்கர் பரப்பளவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் இங்கு அமைவதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் கண்டுள்ள தொழில் வளர்ச்சியை அடையும்.

ரூ.7 ஆயிரம் கோடி

ரூ.4 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட 2-ம் கட்ட பணி தற்போது மறு மதிப்பீடு செய்து ரூ.7 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.42 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வேளாண்மை துறை மூலம் சிறுதானியங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சிறுதானியங்கள் பயிரிடுவதில் தர்மபுரி மாவட்டம் முக்கிய இடத்தில் உள்ளது. மின்சாரம் தாக்கி காட்டு யானைகள் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் கம்பிகள் சீர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

1 More update

Next Story