தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனாவின்வேகம் பெரிய அளவில் இல்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனாவின் வேகம் பெரிய அளவில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னிமலை
தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனாவின் வேகம் பெரிய அளவில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சித்தா நலவாழ்வு மையம்
சென்னிமலை அருகே கே.ஜி.வலசில் கடந்த 1990-ம் ஆண்டு சித்த மருத்துவ நலவாழ்வு மையம் தொடங்கப்பட்டது.
ஆனால் அந்த பகுதியில் மக்கள் தொகை குறைவாக இருந்ததால் நோயாளிகளின் வருகையும் சித்த மருத்துவ மையத்துக்கு குறைவாக இருந்தது. அதனால் அந்த மையம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் அறச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
அதன் பின்னர் கே.ஜி.வலசு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் தொகை அதிகமானதால் கே.ஜி.வலசிலேயே உள்ள சித்த மருத்துவ நலவாழ்வு மைய கட்டிடத்தில் மீண்டும் சித்தா நல வாழ்வு மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையொட்டி கே.ஜி.வலசு சித்தா நல வாழ்வு மையம் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பின்னர் இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.
திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன், அ.கணேசமூர்த்தி எம்.பி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சி.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
கொரோனா தொற்று
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உருமாற்றம் செய்யப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் 6 ஆயிரம் பேருக்கு மேல் நேற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை உள்பட 273 என்ற அளவில் மட்டுமே இந்த பாதிப்பு உள்ளது. இந்த பாதிப்பை பொறுத்தவரை தனிமைப்படுத்திக் கொண்டு சில நாட்கள் வீட்டில் இருந்து மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொண்டாலே சரியாகிவிடும். தொற்றின் வேகம் பெரிய அளவில் இல்லை.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
விழாவில் சென்னிமலை பேரூர் தி.மு.க செயலாளர் எஸ்.எம்.ராமசாமி, ஊராட்சி தலைவர்கள் வி.பி.இளங்கோ (குமாரவலசு), பிரபா தமிழ்செல்வன் (முருங்கத்தொழுவு), முகாசிபிடாரியூர் ஊராட்சி துணை தலைவர் சதீஷ் என்கிற சுப்பிரமணியம், ஓட்டப்பாறை ஊராட்சி துணைத்தலைவர் மன்னர் மன்னன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், மருத்துவத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஈரோடு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் எஸ்.சோமசுந்தரம் வரவேற்று பேசினார்.
முடிவில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஜியதாசு காந்தி நன்றி கூறினார்.