நடுவழியில் காரை நிறுத்தி கலெக்டர், எம்.எல்.ஏ.விடம் அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆலோசனை பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து கேட்டறிந்தார்
நடுவழியில் காரை நிறுத்தி கலெக்டர், எம்.எல்.ஏ.விடம் அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆலோசனை நடத்தி பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கீழ்ப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
இவரை பார்த்ததும் அந்த வழியாக வந்து கொண்டிருந்த கலெக்டர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரும் காரில் இருந்து இறங்கி வந்தனர். அவர்களிடம் 16-ந் தேதி (அதாவது இன்று) தமிழக அரசின் சிறப்பு திட்டமான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிக்கப்பட்டு உள்ளதா? எங்கெங்கு நடத்தப்படுகிறது என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்த அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியில் தாமும் பங்கேற்பதாக கூறினார்.
சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர். சாலையோரத்தில் எளிமையாக நின்றபடி அரசு அலுவலர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு கலந்துரையாடியது அங்கிருந்த கிராம மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தவதாக இருந்தது.