அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளியில் திடீர் ஆய்வு


அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளியில் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 20 July 2023 1:00 AM IST (Updated: 20 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

தலைவாசல்:-

தலைவாசலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அரசு பள்ளி

தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியின் நுழைவுவாயிலில் விடுதலை போராட்ட வீரர்களின் நினைவாக வைத்துள்ள நினைவுத்துணை அவர் பார்வையிட்டார். அதன்பிறகு 6 மற்றும் 10-ம் வகுப்புக்கு சென்ற அவர், மாணவிகளிடம் படிக்க சொல்லி கேட்டார்.

தொடர்ந்து பிளஸ்-1 வகுப்பில் வேதியியல் பாடத்தில் கனிம பண்பறி பகுப்பாய்வு சோதனையை வேதியியல் ஆசிரியர் மணிகண்டன் மூலம் செய்து காண்பிக்க சொல்லி பார்வையிட்டார். செய்முறை சம்பந்தமாக பள்ளி மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவர்கள், ஆசிரியருக்கும் பாராட்டு தெரிவித்தார். பின்னர் பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப பயிலக அறை, சத்துணவு மையம், பள்ளி விளையாட்டு மைதானம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

சுற்றுச்சுவர்

தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டின் அருகே தலைவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பைகள் பள்ளிக்குள் காற்று மூலம் அதிகளவில் வந்து குவிந்து விடுகிறது. எனவே பள்ளியின் சுற்றுச்சுவரை உயர்த்தி கட்டி தர வேண்டுமென ஏற்கனவே பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தார். இது ெதாடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், அமைச்சரிடம் நேரில் தெரிவித்தார்.

இதையடுத்து பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா? என பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெற்றி செல்வனிடம் அமைச்சர் கேட்டறிந்தார். சுமார் 45 நிமிடம் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

====


Next Story