அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
கலைஞர் மகளிர் உரிமை திட்ட நிதி கிடைக்காதவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையிடலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்ட நிதி கிடைக்காதவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையிடலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
அடையாள அட்டை வழங்கும் விழா
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கலைஞர் கருணாநிதி அரங்கத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் வங்கி அடையாள அட்டைகளை (ஏ.டி.எம்.கார்டு) வழங்கும் விழா நேற்றுகாலை நடந்தது. இதற்கு தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் வங்கி அடையாள அட்டைகளை பெண்களுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ வழிவகுத்திடவும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1,000 வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு, தற்போது வழங்கப்பட்டுள்ளது.
சுயமரியாதை
இந்த திட்டம் 2 முக்கிய நோக்கங்களை கொண்டு வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்து கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உரிமைத்தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ வழிவகுக்கும்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு தந்தையாகவும், சகோதரராகவும் இருந்து இந்த உரிமைத் தொகையை உங்களுக்கு வழங்கி வருகிறார். இந்த தொகையை தாங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டம். தமிழக அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் அது இதுதான், ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதந்தோறும் பயனடையும் மிகப்பெரிய திட்டமாகும்.
கால அவகாசம்
தஞ்சை மாவட்டத்தில் 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு அவரவர் கொடுத்த வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கிடைக்காதவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அணுகி மேல்முறையிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கல்யாணசுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தவவளவன் மற்றும் அலுவலர்கள், வங்கியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.