கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை


கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை
x

கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுதலை செய்து தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவிட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளராக இருந்தவர் கா.மு.சுரேஷ். இவரை கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் வைத்து சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ், அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில் என்னை சசிகுமார் கொலை செய்ய முயன்றார் என்றும், அதனால் சசிகுமாரை கொலை செய்தோம் என்றும் வாக்குமூலம் அளித்தார்.

வழக்கு விசாரணை

அதன்பேரில் ஆறுமுகநேரி போலீசார், அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகுமார், மணிகண்டன், ஆல்நாத் ஆகிய மூவரும் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே இறந்துவிட்டனர். எனவே, பாலா என்ற பாலகிருஷ்ணன், கோபி, குமார் என்ற உதயகுமார், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இதேபோல் 21.5.2011 அன்று இரவு கா.மு.சுரேசின் கட்சி அலுவலகம், பாரில் வெடிகுண்டு வீசியதாகவும், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், பாலா என்ற பாலகிருஷ்ணன், கோபி, குமார் என்ற உதயகுமார், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளின் விசாரணையும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விடுதலை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி, 3 வழக்குகளிலும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.

இதேபோன்று 2 வழக்குகளில் சேர்க்கப்பட்ட கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார். அவர் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story