மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு


மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிமெண்டு சாலை அமைக்கும் பணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக மாட வீதியில் உள்ள பே கோபுரம் சந்திப்பு பகுதியில் இருந்து காந்தி சிலை வரை சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்கான முறையாக பள்ளம் எடுக்கப்பட்டு கான்கிரீட் அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் புதிதாக பாதாள சாக்கடை இணைப்பு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று அதிநவீன எந்திரம் மூலம் கான்கிரீட் தளத்தின் மேல் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அந்த பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் எந்திரத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாட வீதியில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7-ம் நாள் விழாவின் போது பெரிய தேர் வலம் வரும் தேரோடும் வீதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என்று ஆன்மிக பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக...

அதன்பின்பு நெடுஞ்சாலை துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பின்பு 2021-22-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை இந்த தேரோடும் சாலையை ரூ.15 கோடியில் சிமெண்டு சாலையாக மாற்ற முதல்-அமைச்சரிடம் கோப்புகளை அனுப்பி அனுமதி பெற்று தற்போது 6 மாத காலமாக இந்த பணி நடைபெற்று வருகிறது.

இந்த சிமெண்டு சாலை விதிக்கு உட்பட்டு தரமான சாலையாக அமைக்கப்படுகிறது. மேல் பகுதி என்பது தேரோடும் பகுதி வழுவழுப்பாக இருந்தால் தேர் ஓட இயலாது

அதற்கான உறுதி இருக்க வேண்டும் என்பதற்காக விமான ஓடுதளம் எவ்வாறு உள்ளதோ அதேபோல் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி சிலிப்பார்ம் பேவர் எந்திரம் என்ற அதிநவீன எந்திரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் இந்த சாலை பணிகளை முடிப்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பம் விமான தளத்தில் தவிர வேறு எங்கும் பயன்படுத்தவில்லை. இந்த எந்திரத்தை தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திருவண்ணாமலையில் தான் பயன்படுத்தப்பட்டு சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எண்ணற்ற திட்டங்கள்

இதனால் தேர் அழுத்தமாகவும், வேகமாகவும் இயக்க முடியும். அதேபோல் திராவிட மாடல் ஆட்சி ஆன்மிக பெருமக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் பார்வதி சீனிவாசன், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ்.தரணிவேந்தன், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திக்வேல்மாறன், தி.மு.க. நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், கார்த்திவேல்மாறன், அருணை வெங்கட் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story