சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விடுவிப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி உள்பட 3 பேரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
விருதுநகர்,
கடந்த சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வருவாய்த்துறை அமைச்சராக சாத்தூர் ராமச்சந்திரன் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் கடந்த 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சுகாதாரம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இருந்தார். அப்போது, அவரும், அவருடைய மனைவி ஆதிலட்சுமி, தொழில் அதிபர் சண்முக மூர்த்தி ஆகிய 3 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 11 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது
இந்த சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்ககோரி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் ஏற்கனவே கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
விடுவிப்பு
இந்த வழக்கு விசாரணைக்காக பலமுறை கோர்ட்டில் அவர் ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் நேற்று தீர்ப்பு கூறினார்.
சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லாததால் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி ஆதிலட்சுமி, சண்முகமூர்த்தி ஆகிய 3 பேரையும் விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.