சிறப்பு மனுநீதி நாள் முகாமில் ரூ.4½ கோடியில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்
திருவலத்தை அடுத்த ஆரிமுத்து மோட்டூர் பகுதியில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 677 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
திருவலம்
திருவலத்தை அடுத்த ஆரிமுத்து மோட்டூர் பகுதியில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 677 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
மனுநீதிநாள் முகாம்
காட்பாடியை அடுத்த திருவலம் அருகே ஆரிமுத்து மோட்டூரில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது. இதில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி.ஆக்ியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டைகள், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, தையல் எந்திரம் உள்பட ரூ.4 கோடியே 47 லட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகளை 677 பயனாளிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
இடைத்தரகர்கள்
அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
மக்களின் தேவைகளை அறிந்து தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு நல திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இது போன்ற திட்டங்களில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால், அவர்கள் மீது அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக இருந்து அரசின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அது போல தான் தானும் காட்பாடி தொகுதியில் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன்.
வேலூர் அருகே உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
காட்பாடி பகுதியில் இந்த ஆண்டு 200 படுக்கைகளுடன் அரசு மருத்துவமனை தொடங்கப்படும்.
இம்மருத்துவமனை வரும் 5 ஆண்டுகளில் 1000 படுக்கைகளுடன் மிகப் பெரிய மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.
தொழிற்பேட்டை
படித்த இளைஞர்களுக்ககு அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் காட்பாடி பகுதியில் இந்த ஆண்டு தொழிற்பேட்டை அமைக்கப்படும் மேலும் தொழில்நுட்ப பூங்கா ஒன்றும் அமைக்கப்படும்.
பொன்னையில் ரூ.40 கோடி மதிப்பில் மேம்பாலமும் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி 5 அடி உயரத்திற்கு பொன்னையாற்றின் குறுக்கே தடுப்பணையும் இந்த ஆண்டு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்மூண்டி பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாலாற்றின் குறுக்க மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், காட்பாடி ஒன்றிய செயலாளர்கள் தணிகாசலம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.