ரூ35 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்


ரூ35 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்
x

பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

வேலூர்

திருவலம்,

பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

உயா்மட்ட பாலம்

காட்பாடி தாலுகா பொன்னையில் நிரந்தர வெள்ள நிவாரண பணி 2021-22 கீழ் சித்தூர்- திருத்தணி சாலையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் பொன்னை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணி தொடக்க விழா ேநற்று நடந்தது.

தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி ஆகியோர் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

பொன்னையில் பாலம் கட்டுவது மட்டுமல்லாமல், மேல்பாடியிலும் பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல்

காங்கேயநல்லூரில் இருந்து வேலூர் கலெக்டர் அலுவலகம் வரை ரூ.22 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காட்பாடியில் ஒரே ஒரு மேம்பாலம் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதனால் இன்னொரு மேம்பாலம் கட்ட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொன்னையில் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்ள குறைகள் விரைவில் சரி செய்யப்படும்.

திருவலம்- காட்பாடி, சித்தூர்- திருத்தணி, பொன்னை- திருவலம், இளையநல்லூர் ஆகிய சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி, கலெக்டர் குமாரவேல்பாண்டியன், வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன், வாலாஜா மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான அக்ராவரம் ஏ.கே.முருகன், ஒன்றிய செயலாளர் தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமுதாய வளைகாப்பு

இதன் பின்னர் வள்ளிமலையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு, சீர்வரிசைகளை கொடுத்து கர்ப்பிணிகளை வாழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து விண்ணம்பள்ளி மற்றும் கொடுக்கத்தாங்கல் வருவாய் கிராமங்களுக்காக, சேர்க்காட்டில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 477 பயனாளிகளுக்கு சுமார் ரூ.2 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

துணை போனதில்லை

ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டுவதை தடுக்க, உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விரைவுப்படுத்துவோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அணைகள், மதகுகள் பராமரிக்கப்படவில்லை.

இதனால் தான் கிருஷ்ணகிரியில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறியது. பரம்பிக்குளத்திலும் மதகுகளின் கதவுகள் உடைந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மத்திய மந்திரி அஸ்வினி குமார் தி.மு.க. பயங்கரவாதத்திற்கு துணை போவதாக கூறுகிறார். நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்திற்கு துணை போனதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story