பலியானவரின் குடும்பத்துக்கு அமைச்சர் இ.பெரியசாமி நிதி உதவி
குமுளி மலைப்பாதையில் விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு நிதி உதவியை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.
திண்டுக்கல் எம்.வி.எம்.நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர் தேனியை அடுத்த ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார். இதற்காக அங்குள்ள சார்பதிவாளர் அலுவலக தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் சபரிமலை அய்யப்ப சாமிக்கு மாலை அணிந்த இவர், கடந்த 22-ந்தேதி அய்யப்ப பக்தர்களுடன் காரில் சபரிமலைக்கு புறப்பட்டார்.
அடுத்த நாள் இரவு குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் மாதா கோவில் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கண்ணிமைக்கும் நேரத்துக்குள் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவக்குமார் உள்பட 8 அய்யப்ப பக்தர்கள் பலியாகினர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் வசிக்கும் சிவக்குமாரின் குடும்பத்தினரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இளமதி, தி.மு.க. மாநகர பொருளாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.