அப்துல் கலாமுக்கு விரைவில் சிலை அமைக்கப்படும் அமைச்சர் தகவல்


அப்துல் கலாமுக்கு விரைவில் சிலை அமைக்கப்படும் அமைச்சர் தகவல்
x

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வளாகம் அருகே அப்துல் கலாமுக்கு விரைவில் சிலை அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் மு.பெ.சாமி நாதன் கூறினார்.

சென்னை,

சென்னை, தரமணி, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் புதிய புரோட்டான் சிகிச்சை பிரிவில் நேற்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிகிச்சை மையத்தை திறந்துவைத்ததுடன், தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் மிகப்பெரிய புரோட்டான் சிகிச்சை திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:-

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் பிரிவு

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் ஜப்பான் நாட்டுக்குச் சென்று புற்றுநோய்க்கு அங்கே அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து தெரிந்து கொண்டு வந்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை இன்றைக்கு இந்தத் திட்டத்தை தொடங்குகிற நேரமாக அமைச்சரும் அதற்கான முயற்சியையும், முன்னெடுப்பையும் எடுத்திருக்கின்றார்.

மேற்கு மண்டலத்திலேயே ஒரு சிறப்பான மருத்துவமனை தொடங்குவதற்கான பணிகள் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.60 கோடி செலவில் கேன்சர் கேர் யூனிட் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதய நோய்க்கு அடுத்தபடியாக வரக்கூடிய நோய் என்பது புற்றுநோயாக இருக்கிறது. அதற்கு, மனிதனுடைய உணவு, பழக்க வழக்கங்கள், உடல் பருமன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை காரணங்களாகும்.

பாராட்டு

இந்த புற்றுநோய் கடந்த காலத்தில் கொடிய நோயாக இருந்தாலும், இன்றைக்கு மனிதர்களை பாதிக்கக்கூடிய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. புற்றுநோயில் இருந்து மக்களை மீட்டெடுக்கக்கூடிய வகையிலும், அதேபோல பிறந்த குழந்தைக்குக்கூட புற்றுநோயை கண்டறியக்கூடிய தேவை இன்றைக்கு இருக்கிறது.

அப்பல்லோ மருத்துவமனை சாதனையாளராக திகழ்ந்த அப்துல் கலாம் நினைவாக இந்தத் திட்டத்தை இங்கே தொடங்கி இருப்பதும் உள்ளபடியே பாராட்டுக்குரியதாகும்.

அப்துல் கலாமுக்கு சிலை

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன் என்றால், முதல்-அமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் செய்தித்துறை சார்பில் விரைவில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில், அப்துல் கலாமுக்கு உருவச் ிலை அமைக்கப்படவிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் சலீம், அப்பல்லோ குழும மருத்துவமனை ஆன்காலஜி மற்றும் இன்டர்நேஷனல் இயக்குனர் (ஆபரேஷன்ஸ்) ஹர்ஷத் ரெட்டி, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஹரிஷ் திரிவேதி, மருத்துவ இயக்குனர் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறைத் தலைவர் ராகேஷ் ஜலாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story