காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு
முத்தூர் - காங்கயம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முத்தூர்
முத்தூர் - காங்கயம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காவிரி கூட்டு குடிநீர்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவிரி ஆற்றங்கரையோரத்தில் நீரூற்று கிணறுகள் அமைக்கப்பட்டு ராட்சத குழாய்கள் வழியாக திருப்பூர் மாவட்டம் முத்தூர், மூலனூர், குண்டடம், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் பேரூராட்சி பகுதிகள் காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம் ஆகிய நகராட்சி பகுதிகளில் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராம பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முத்தூர் - காங்கயம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள கொடுமுடி காவிரி ஆறு, இச்சிப்பாளையம், முத்தூர் - மேட்டுக்கடை, வாலிபனங்காடு குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையங்களை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் நேற்று மதியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சுத்திகரிப்பு நீரேற்றம்
அப்போது அவர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காவிரி ஆற்றினை நீராதாரமாக கொண்ட முத்தூர் - காங்கயம் காவிரி கூட்டு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கொடுமுடியில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் நீரூற்று கிணறுகளில் தலைமை இயல்பு நீரேற்றம் செய்யப்பட்டு, இச்சிப்பாளையத்தில் சுத்திகரிப்பு நீரேற்றம் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் மற்றும் 1790 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது
மேலும் இந்த திட்டம் கடந்த 2013-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு தினந்தோறும் திருப்பூர் மாவட்ட குடிநீர் தேவைக்கு 40.45 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உள்ள கான்கிரீட் குழாய்கள் கடந்த 25 வருட கால பயன்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக குடிநீர் குழாய்களில் அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு வருவதால் ஒரே அளவில் சீரான குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முத்தூர் - காங்கயம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட சீரமைப்பு பணிகளுக்கு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம்
ரூ.62 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் தற்போது வரை 36 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த பணிகள் அனைத்தும் 1 ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. அதன்பின்பு திருப்பூர் மாவட்டத்தில் முத்தூர் - காங்கயம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.