பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க சுற்றுச்சுவர் கட்டப்படும்- அமைச்சர் சேகர்பாபு பேட்டி
பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க சுற்றுச்சுவர் கட்டப்படும்- அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க சுற்றுச்சுவர் கட்டப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அமைச்சர் தரிசனம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு நேற்று மதியம் 2 மணி அளவில் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் அவரை கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அங்கு அவர் அம்மனை தரிசனம் செய்தார். அதன்பின்னர் வெளியே வந்த அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சுற்றுச்சுவர்
பண்ணாரி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை விடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு தற்போது கோவிலில் ராஜகோபுரம் 9 நிலையில் ரூ.12 கோடி செலவில் கட்டப்படும். மேலும் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால் யானை மற்றும் பல்வேறு வனவிலங்குகள் கோவில் பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள இரும்பு கம்பியாலான சுற்றுச்சுவரை சேதப்படுத்தி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கோவிலை சுற்றி சுமார் ரூ.2 கோடி செலவில் உறுதியான சுற்றுச்சுவர் கட்டப்படும்.
மருத்துவமனை அமைப்பு
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவில் அருகே முதல்-உதவி அளிக்கக்கூடிய சிறிய மருத்துவமனை அமைக்கப்படும். அதில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அதன்பின்னர் அமைச்சர் கோவில் அருகே மருத்துவமனை அமைக்க ஏதுவான இடத்தையும், ராஜகோபுரம் அமைக்கப்படும் இடத்தையும், அது தொடர்பான திட்ட அறிக்கையையும், அதன் வரைப்படத்தையும் பார்வையிட்டார்.
அப்போது அமைச்சருடன் மாவட்ட செயலாளர் நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. உள்பட பலர் இருந்தனர்.