காலை உணவு திட்டப்பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட பணியை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காலை உணவு திட்டம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதை முன்னிட்டு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று சேலம் மாவட்டம் காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு இருப்பு வைக்கப்பட்டு உள்ள பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களின் தரங்களை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நகர்ப்புறங்களில் மட்டும் இந்த திட்டம் செயல்பட்டு வந்தது.
விரிவுபடுத்தப்படுகிறது
இந்த நிலையில் நாளை முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் நாளை தொடங்கி வைக்கிறார்.
சேலம் மாவட்டத்தில் 1,418 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.